Updated by admin on
Monday, July 06, 2020 01:41 PM IST
Chennai:
கர்னாடக இசை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த எம்.பாலமுரளி கிருஷ்ணா, 1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தவர் (ஜூலை 6). தனது 6-வது வயதிலேயே இசைப் பயணத்தை தொடங்கியவர்.
9 ம் வயதில் வாய்ப்பாட்டு மட்டுமின்றி மிருதங்கம், வயலின், கஞ்சிரா உள்ளிட்ட வாததியங்களில் தேர்ச்சி பெற்றார். வானொலியில் முதல் முதலில் அரங்கேற்றம் நடத்தினார். வானொலியில் பக்தி மஞ்சரி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி.என்.பாலசுப்ரமணியம், போன்ற முன்னணி பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார்.
தென்னிந்தியாவில் அவர் பாடாத சபாக்களே இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளிலும் 25,000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர்.
‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருநாள் போதுமா’, ‘கவிக்குயில்’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்களாக நிலைத்து நிற்கின்றன. மத்திய அரசின் பத்மவிபூஷண் விருது, 2 தேசிய விருதுகள், சென்னை மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது, பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது, கலாசிகாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.
தியாகராஜரின் சிஷ்ய பரம்பரை
தியாகராஜரின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வருபவர் பாலமுரளி கிருஷ்ணா. தியாகராஜரின் நேரடி சீடர் மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடம் இருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என சிஷ்ய பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம்தான் பாலமுரளி கிருஷ்ணா முறையாக கர்னாடக இசை கற்றார். அதாவது, சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 4-வது சிஷ்ய பரம்பரையில் வந்தவர் எனும் புகழுக்கு உரியவர்.
மொழியைக் கடந்தது இசை என்பது போலவே, பாலமுரளி கிருஷ்ணாவின் குரலும் மொழியைக் கடந்தது. தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமை மிக்கவர். இசை அமைப்பாளர், சாகித்யகர்த்தா, நடிகர் என கலையின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர். பாலமுரளி கிருஷ்ணா வாத்திய விற்பன்னர்.
வயலின், வயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் என பல வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவர்.
ராக தேவன்
கர்னாடக இசை உலகில் பலரும் பழைய சம்பிரதாயங்களை தொடர்ந்து கொண்டிருந்த நாட்களிலேயே, ஸித்தி, சுமுகம், ஸர்வஸ்ரீ, ஓம்காரி, கணபதி என்ற பெயர்களில் புதிய ராகங்களை அளித்த கொடையாளர். அதிலும் இவர் உண்டாக்கிய மஹதி ராகம் மிகவும் விசேஷமானது. 7 ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ராகங்களை சம்பூர்ண ராகங்கள் என்பார்கள். 5 ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ராகங்களும் நிறைய இருந்தன. 4 ஸ்வரஸ்தானங்களுடன் ஒரு ராகத்தை உண்டாக்கி அதற்கு (நாரதரின் கையில் இருக்கும் வீணையின் பெயர்) ‘மஹதி’ என்னும் பெயரைச் சூட்டினார் பாலமுரளி கிருஷ்ணா.
1967 ல் 'பக்த பிரகலாதா' என்ற தமிழ் படத்திலும், 'சந்தினே செந்தின செந்தூரம்' என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். 72 மேளகர்த்தா ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றி சாதனை படைத்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசன், ஜெயலலிதா, வைஜயந்திமாலா, இசை ஆர்ராழ்ச்சியாளர் டி.எம்.சுந்தரம் உள்ளிட்டோர் இவரிடம் இசை பயின்றுள்ளனர்.
கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஷங்கர் கணேஷ் போன்ற இசை அமைப்பாளர்களின் திரைப்படப்பாடல்களை பாடியுள்ளார். கே.வி. மகாதேவன் இசையில், திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கலைக்கோயில் படத்தில் தங்கரதம் வந்தது (ஆபோகி ராகம்), என்ற பாடல், இளையராஜா இசையில் கவிக்குயில் (ரீதிகௌலா ராகத்தில் அமைந்த முதல் திரைப்படப்பாடல்), சின்ன கண்ணன் அழைக்கின்றான், மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (சாமா ராகம்) என்ற பாடலும் மிகவும் பிரபலமானவை.
அபூர்வ ராகங்கள் படத்திற்காக, ஒரு முக்கியமான பாடல் கட்சியில், ஒரு அபூர்வமான ராகத்தில் ஒரு பாடல் அமையவேண்டும் என்று பாலச்சந்தர் எம்.எஸ்.வி. இடம் தெரிவித்தார். எம்.எஸ்.வி விருப்பப்படி ஒரு அபூர்வமான ராகம், மஹதி, அதில் எப்படி பாட்டை அமைக்கலாம் என்றும் பாலமுரளி எம்.எஸ்.வி.விற்கு ஆலோசனை வழங்கினார். அந்த அடிப்படையில், அதிசய ராகம் என்ற பாடல் யேசுதாஸ் குரலில் அமைந்து மிக பெரிய வெற்றி அடைந்தது.
ஏன் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று பாலமுரளியிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, "எனக்கும் ஆசைதான். ஆனால் தொடர்ந்து நாரதர் வேடமாக எனக்கு கொடுத்தால் நான் எப்படி ஏற்றுக்கொள்வது? ஒரு நல்ல, அழகான நடிகையுடன் ஒரு டூயட் காட்சி கொடுத்தால் நடிப்பேன்" என்றார் சிரித்தபடி.